2024ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை என்பது திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சென்ற நான்கு ஆண்டு உரைகளின் கலவையாக உள்ளது.பொதுவாக ஆட்சியாளரின் கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநரின் பேருரை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட கொள்கைத் திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ, இந்த உரையை படிக்காமல், இதில் உள்ள கருத்துகளிலிருந்து முரண்படுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆளுநர் சென்றுவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.ஆளுநர் உரையில் மக்களுக்கான நலத் திட்டங்கள் ஏதும் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய திட்டங்கள் ஏதும் இருக்கிறதா? என்று துருவிப் பார்த்தேன். ஆனால், அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்கள். இதனை நேரத்தை வீணடிக்கிற வேலை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த ஆளுநர் உரையிலே, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாகவும், 14.54 இலட்சம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், 6.64 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இது ஒரு மதிப்பீடு தான். இவையெல்லாம் முழுமையாக நடைமுறைக்கு வருகிறதா அல்லது எத்தனை சதவீதம் நடைமுறைக்கு வருகிறது என்பதைப் பொறுத்துதான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றிவாய்ப்பினை கணிக்க முடியும். “கடனைக் குறைப்போம்” என்று கூறிக்கொண்டு, மேலும் மேலும் கடன் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசு, இதனை சாத்தியப்படுத்துமா என்பது கேள்விக்குறிதான். இது ஒரு அரசியல் ஆதாயத்திற்கான நடவடிக்கை.’மிக்ஜாம்’ புயலின்போது முழு அரசு இயந்திரமும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருக்கிறது. கள நிலைமையோ வேறாக இருந்தது. 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மழை நீரில் மக்கள் தத்தளித்தனர் என்பதுதான் யதார்த்தம். பெரும்பாலான இடங்களில், மக்களே தங்கள் சொந்த செலவில் படகில் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றார்கள் என்பதும், பெரும்பாலான இடங்களில் உணவுப் பொட்டலங்கள் கூட வழங்கப்படவில்லை என்பதும்தான் கள யதார்த்தம். தென் மாவட்டங்களில், அரசு நிர்வாகமே முடங்கிப் போய்விட்டது என்ற அளவுக்கு மோசமான நிலைமை. உண்மை நிலைமை இவ்வாறிருக்க, முன்னுக்குப் பின் முரணான தகவல் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இயற்கை பேரிடர்களைத் திறம்பட கையாண்ட இந்த அரசிற்கு பாராட்டுகள் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையிலேயே இயற்கை பேரிடரை திறம்பட கையாண்டிருந்தால், பொதுமக்கள் பாராட்டியிருப்பார்கள்; சமூக ஆர்வலர்கள் பாராட்டியிருப்பார்கள்; நடுநிலையாளர்கள் பாராட்டியிருப்பார்கள்; அரசியல் கட்சிகள் பாராட்டியிருக்கும். அப்படி யாரும் பாராட்டியதாகத் தெரியவில்லை. தனக்குத் தானே பாராட்டிக் கொள்வது என்பது பாராட்ட யாருமில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டே வருகின்ற நிலையில், தி.மு.க.வினரின் அராஜகம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற நிலையில், மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் தமிழ்நாடு அமைதியான மாநிலமாகக் கருதப்படுகிறது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருப்பது “முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்”.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 1.15 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அனைத்து பெண்களுக்கும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, வெறும் 1.15 கோடி பெண்களுக்கு மட்டும் அளித்து இருப்பது என்பது ஏமாற்று வேலை.இந்த ஆளுநர் உரையில், தி.மு.க. அரசின் இடைவிடாத முயற்சியால் இதுவரை 242 மீனவர்களும், 1 மீன்பிடிப் படகும் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம்தான் மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்களே தவிர, இதில் தி.மு.க. அரசுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதை எல்லாம் ஒரு சாதனையாக ஆளுநர் உரையில் குறிப்பிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, மருத்துவர்களுக்கான அரசாணை எண். 354-ஐ நடைமுறைப்படுத்துதல், மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, 100 ரூபாய் எரிவாயு மானியம் போன்றவை குறித்து ஏதும் அறிவிக்கப்படாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தினை அளித்துள்ளது.புதுமைப் பெண் திட்டம், பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு, பால் கொள்முதல் விலை உயர்வு என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் இந்த ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் எதுவும் இந்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை.மொத்தத்தில் இந்த ஆளுநர் உரையில் புதியதாக ஏதுமில்லை. பல பொய்களை சொல்லி மக்களை தொடர்ந்து ஏமாற்ற தி.மு.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இனியும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அரசுக்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என ஓ பன்னீர் செல்வம் தனது “x” பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *