எறும்புகளை நசுக்கும் யானைகள்…
சமீபத்தில் மூன்று படங்கள் வெளியானது… வாழை, கொட்டுகாளி, போகும் இடம் வெகு தூரம் இல்லை… இதில் ‘போகும் இடம் எது தூரம் இல்லை’ அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் உள்ளே வராத அளவிற்கு வாழையும் கொட்டுகாளியும் பார்த்துக் கொண்டது.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக புரமோஷன் செய்யப்பட்ட படங்கள் தான் வாழையும், கொட்டுகாளியும்.
மூன்றுமே கன்டென்டுகளை நம்பி வந்த படம். மூன்றுமே தியேட்டரில் வெளியீட்டுக்காக பல மாதங்கள் காத்திருந்த படம்.
மூன்றுமே வெவ்வேறு தளத்தில் சிறந்தது என்றாலும், அதில் மிக சிறந்தது எதுவென்றால் போகும் இடம் வெகு தூரம் இல்லை.
இதில் யானை வாழை, SK என்ற யானை மேல் ஏறி வந்தது கொட்டு காளி… எறும்பு போகும் இடம் தூரம் இல்லை…
திரைப்படத்துறையில் வெற்றியாளர்களை அண்டிப் பிழைக்கும், பிழைப்புவாதிகளால் தான் திறமையாளர்கள் மறைக்கப்படுகிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் வாழையும் கொட்டுக்காளியும்…
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்றாலும் 5 ரூபாயை 5 ஆயிரமாக மாற்றக் கூடிய சிறந்த வியாபாரி… இங்கு திறமையோடு, வியாபார தந்திரமும் வேண்டும் என்பதை உணர்த்தும் உழைப்பாளி… ‘அவரின் அரவணைப்பு வேண்டும் என்ற நோக்கில் வாழைக்கு கூவிய கூட்டத்தில் பாதி பேர் ‘நல்ல படங்களுக்கும் கூவ வேண்டும்…’ என கூவியிருந்தால் ‘போகும் இடம் வெகு தூரம் இல்லை…’ ஜெயித்து இருக்கும். அப்பட புது தயாரிப்பாளர், தமிழ் திரைப்படத்துறையை நம்பி வந்த தெலுங்கு தயாரிப்பாளர், அடுத்து ஒரு நல்ல content -டை நம்பி படம் எடுத்திருப்பார். ஆக ஒரு திறமையாளரின் வாய்ப்பை தட்டி பறித்துக் கொண்டது வாழையும், கொட்டுகாளியும்…
கொட்டுகாளி வணிக நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல… ஆனால் அதை வணிக நோக்கத்தில் தியேட்டரில் வெளியிடப்பட்டு, அதைப் பார்த்த ரசிகர்களில் பாதி பேர் இனி 10 வருடத்துக்கு தியேட்டர் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள்… ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வர படாத பாடுபட்டு கொண்டு இருக்கும் இச்சூழலில் இந்த மாதிரி ஏமாற்று தனங்கள் ரசிகர்களை வருத்தப்பட வைக்கும்…
யானை உண்ணும் உணவில் சிதறும் பருக்கைகள், ஆயிரம் எறும்புகளை வாழ வைக்க வேண்டும்… ஆனால் யானை உண்பதற்கு ஆயிரம் எறும்புகளை நசுக்கக் கூடாது…
வலிமையானவர்களுக்கு தான் வணிகம் என்றால் எளிமையானவர்கள் எங்கு செல்வது… அவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்ளுங்கள்…
ஜெயித்தவர்களே!… ஜெயிக்க துடிப்பார்களை தூக்கி விடுங்கள்… நசுக்காதீர்கள்…
முகமது அலி(கட்டுரையாளர்)