பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் வேறு இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என கூறிபொதுமக்கள் சாலை மறியல்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட உள்ள நிலையில் வேறு இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவிந்தபுத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கங்கா ஜடாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தின் அருகே முகப்பு பகுதியில் பழைய பள்ளி கட்டிடம் இருந்தது. இதனை ஊராட்சி நிர்வாகம் மூலம் அகற்றி உள்ளனர்.இந்நிலையில் அந்த பள்ளி இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட உள்ள நிலையில் அளவுகள் அளந்து பணிகள் துவங்கி உள்ளனர்.இந்த பணியை வேறு இடத்தில் தொடங்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் வேலைகளும் நடைபெறுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கோவிந்தபுத்தூர் கிராமத்தில் முத்துவாஞ்சேரி – தா.பழூர் சாலையில் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.