புதுச்சேரியில் “கலை, அறிவியல் கல்லூரிகளாக மாறும் என்ஜினீயரிங் கல்லூரிகள்”
கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 2019-ம் ஆண்டில் 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் 17 தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருந்தன. என்ஜினீயரிங் கல்லூரிகளில் 7 ஆயிரம் பி.டெக். இடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டில் 7 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்டாக் கவுன்சிலிங்கில் 10 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமே பங்கேற்றுள்ளது. இதில் 3 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்புமா? என்பதே சந்தேகமாக உள்ளது. எனவே இந்த 3 கல்லூரிகளும் விரைவில் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. பி.டெக். படிப்புகள் மீது மாணவர்களிடையே மோகம் குறைந்துள்ளது 2000-ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையின்போது வேலை வாய்ப்பு குறைந்தது. தனியார் கல்லூரிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்கள் ரூ.15 ஆயிரம் சம்பளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் என்ஜினியரிங் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்தது. அதேநேரம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிர்வாக செலவுகளை சமாளிக்க முடியாமல் சில என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டன. இதனால் கடந்த 5 ஆண்டில் 7 என்ஜினீயரிங் கல்லூரிகள் கலை கல்லூரிகளாக மாறிவிட்டன. இந்த ஆண்டு 3 அரசு என்ஜினீயரிங் கல்லூரி, 10 தனியார் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 264 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீத இடங்களாவது நிரம்பினால்தான் கல்லூரிகளை நடத்த முடியும். இல்லாவிட்டால் கல்லூரிகளை நடத்த முடியாது. இதனால் அரசு ஒதுக்கீடு இடங்களும் குறையும் மாதந்தோறும் தொழில்நுட்பம் மாறுகிறது. அதற்கு ஏற்ப மாணவர்களை கல்லூரிகள் தயார்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோரிடம் எழுந்துள்ளது.