“முன்பை விட 100 மடங்கு வேகத்தில் இணையதள வசதி கிடைக்கும்” பிரதமர் நரேந்திர மோடி உறுதி!
யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் இணையதள வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் லட்சத்தீவு-கொச்சி இடையே கடலுக்கு அடியில் கண்ணாடி இழை இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்து இருந்தார். அதன்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டு விரைவாக முடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சத்தீவில் இணையதள வேகம் 1.7 ஜி.பி.எஸ்-ல் இருந்து 200 ஜி.பி.எஸ். ஆக உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் உள்பட ரூ.1,150 கோடி திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவராட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், லட்சத்தீவின் பரப்பளவு சிறியது, ஆனால் இந்த மக்களின் இதயம் பெரியது. இங்கு எனக்கு கிடைத்த வரவேற்பு, அன்பு மற்றும் ஆசீரால் நெகிழ்ந்துள்ளேன். இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மத்தியில் ஆண்ட முந்தைய அரசுகள் லட்சத்தீவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தொலைதூர மாநிலங்கள், எல்லை பகுதிகள், கடலின் நடுவே உள்ள தீவுகள் எந்த கவனமும் பெறவில்லை. ஆனால் இந்த பகுதிகளின் முன்னேற்றத்துக்கு பா.ஜ.க. அரசு முக்கியத்துவம் அளித்தது. எங்கள் அரசு கடந்த 10 ஆண்டுகளில் எல்லை பகுதிகள், தீவுப்பகுதிகளை முன்னுரிமை பகுதிகளாக மாற்றியது. அடுத்த ஆயிரம் நாட்களுக்குள் உங்களுக்கு அதிவேக இணையதள வசதி வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு நான் உறுதி அளித்தேன். இன்று கொச்சி-லட்சத்தீவு கண்ணாடி இழை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முன்பை விட 100 மடங்கு வேகத்தில் இணையதள வசதி கிடைக்கும் என்றார்.