பின்னணி பாடகர் வேல்முருகன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு..
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று மெட்ரோ ரயில் நிலைய உதவி மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இரவு நேரங்களில் 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே பேரிகார்டு போட்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு, இந்த வழியில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் செல்லக் கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன், வடிவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வடிவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி மேலாளர் வடிவேலு புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் பின்னணி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.