பள்ளி மாணவியுடன் நிர்வாண வீடியோ; தாய்க்கு அனுப்பி வைத்து மிரட்டிய சிறுவன் கைது!
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தான். மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, சிறுமியை அவரது பெற்றோர் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் காதலியை பார்க்க முடியாமல் சிறுவன் தவித்து வந்ததோடு அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அப்போது, திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் காதலி படித்து வருவதை சிறுவன் தெரிந்து கொண்டான். இதையடுத்து சேலத்தில் இருந்து திருப்பூருக்கு சென்ற அவன், காதலி படிக்கும் பள்ளிக்கூடத்தை கண்டுபிடித்து அவரிடம் பேச தொடங்கினான். இதனால் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில் இருவரும் ஆனந்தம் அடைந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் தனியாக சந்தித்து தங்களது காதலை வளர்த்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவியை தனியாக அழைத்து சென்ற சிறுவன், மாணவியுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மாணவிக்கு தெரியாமல் சிறுவன் அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டான். பின்னர் அந்த வீடியோவை சேலத்தில் உள்ள மாணவியின் தாயின் செல்போன் எண்ணுக்கு அனுப்பினார். இதனை பார்த்த மாணவியின் தாய், தனது மகள் சிறுவனுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த சிறுவனின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மாணவியின் தாய், என் மகளின் வாழ்க்கையை ஏன் இப்படி நாசமாக்குகிறீர்கள்? என்று கேட்டு கதறி அழுதார். அதற்கு சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உங்களது மகளிடம் சென்று கேளுங்கள் என்று கேட்டு அவர்களை விரட்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், துணை கமிஷனர் மதிவாணன் விசாரணை நடத்தி இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது, மாணவியுடன் நிர்வாணமாக இருந்த வீடியோவை அவரது தாய்க்கு அனுப்பியது ஏன்? என்பது குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு, காதலியை பிரித்து திருப்பூருக்கு அனுப்பியதால் அவரை பார்க்க முடியாமல் பரிதவித்து வந்ததாகவும், இதனால் அவரை சந்திக்க முடியாமல் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாணவியுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோவாக எடுத்து அவரது தாய்க்கே அனுப்பி சிறுவன் மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். தொடர்ந்து சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.