சென்சாரில் புதிய கட்டுப்பாடு… இனி வயது அடிப்படையில் படங்களுக்கு சான்றிதழ்
திரைப்படத் துறையில் தணிக்கை என்பது இன்றியமையாதது. அந்தந்த தணிக்கை வாரியங்கள் அந்தந்த வயதினருக்கு ஏற்ற திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. தற்போது, இந்தியாவில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழின் பணியகம் (CBFC) திரைப்படங்களை மூன்று பிரிவுகளின் கீழ் மதிப்பிடுகிறது.
அதாவது U, U/A, A என மதிப்பிடுகிறது. ‘U’ சான்றிதழைப் பெற்ற திரைப்படத்தை அனைத்து வயதினரும் எந்தத் தடையுமின்றிப் பார்க்க முடியும். ‘U/A திரைப்படங்களையும் அனைவரும் பார்க்கலாம், ஆனால் குழந்தைகள் அந்தப் படங்களை பெற்றோரின் வழிகாட்டுதலுடனும், கண்காணிப்பிலும் பார்க்க வேண்டும். தணிக்கை துறையால் ‘A’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும்.
இப்போது, ஒளிப்பதிவு திருத்த மசோதா, 2023ஐ அறிமுகப்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இனிமேல், திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படும். ஐந்து புதிய வகைப்பாடுகள் U, U/A 7+, U/A 13+, U/A 16+ மற்றும் A. புதிய வகைப்பாடுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:
– U சான்றிதழ் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம்.
– U/A 7+ சான்றிதழ் பெற்ற படங்களை 7 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
– U/A 13+ சான்றிதழ் பெற்ற படங்களை 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
– U/A 16+ சான்றிதழ் பெற்ற படங்களை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
– A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
சமீபத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் A சான்றிதழ் பெற்று திரையரங்குகளில் வெளியானது. படம் காவல் துறையினரின் அத்துமீறல்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை மற்றும் ரத்த காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்ததால் அப்படத்திற்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இருப்பினும், திரையரங்குகளில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் படம் பார்க்க வந்திருந்தனர். இதுதொடர்பாக, பல இடங்களில் பெற்றோர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பிரச்னைகள் எழுந்தன.
ரோகிணி திரையரங்கம் பத்து தல படம் வெளியான முதல் நாள் அன்று, நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அனுமதிக்காதது சர்ச்சையை கிளப்பியது. அப்போது, அதற்கு திரையரங்க நிர்வாகம் அளித்த பதிலில் படம் U/A தணிக்கை சான்றிதழ் பெற்றிருப்பதாகவும், கைக்குழந்தைகளுடன் படம் பார்க்க வந்ததால் அவர்களை அனுமதியளிக்கவில்லை எனவும் கூறியிருந்தது. இதையொட்டி, திரைப்பட தணிக்கையும் பல்வேறு விமர்சனங்களுக்கும், கேள்விக்கும் ஆளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.