உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி – எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு சதி!

“உயர்கல்வி நிறுவனங்களில்
எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்” என்று பல்கலைக்கழக மானியக் குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் திட்டமே ஆகும். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் “ பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘ மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி , மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்;
620இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்டி பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர் ,232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும்; ஓபிசி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும்; ஐஐடி-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும்; ஐஐஎம் களில் எஸ்சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை. “
என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்தப் பணியிடங்களையெல்லாம் நிரப்புமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை கடிதம் அளித்து வலியுறுத்தினோம். நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை பாஜக அரசால் நிறுத்தப்படுகிறது. இன்னொரு புறம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு காலி செய்யப்படுகிறது. இது பாஜகவை வழிநடத்தும் ஆர் எஸ் எஸ் மனுவாத கொள்கையின் வெளிப்பாடே ஆகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் படிக்கக் கூடாது என்பதுதான் மனுவாத சதித்திட்டம். அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் ஆர்எஸ்எஸ்’ சின் நோக்கம்.

அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial