பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் மருத்துவ மையம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக வள்ளிக்குகை அருகே மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஷிப்டு முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள கடலில் புனிதநீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடலில் புனித நீராடும் போது குறிப்பிட்ட ஆழத்தை தாண்டியும், அலையில் சிக்கியும் பக்தர்கள் அவ்வப்போது ஆபத்தையும் சந்திக்கின்றனர். அவ்வாறான நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பக்தர்களும், கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்தும், வாகனங்களில் வந்தும், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் கோயிலில் கூட்டத்தை கடந்து அவசர ஊர்தி வந்து முதலுதவி கிடைப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் நடந்தே முடிந்து விடுகிறது. திருவிழா காலங்களில் கூட்ட நெரிசலில் அவசர ஊர்தியில் வழிநெடுகிலும் உள்ள போக்குவரத்து நெருக்கடியைக் கடந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் பல சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அவசர முதலுதவி சிகிச்சை செய்வதற்கு கோயில் வளாகத்தில் மருத்துவமனை தேவை என்பது பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே குடிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் கோயிலில் தற்போது ரூ.300 கோடி செலவில் நடந்து வரும் மெகா திட்டப்பணிகளால் இந்த குடில் அகற்றப்பட்டு, தற்போது வள்ளிக்குகை அருகே தேவர் குடிலில் தற்காலிகமாக மருத்துவ மையம், ஆங்கில மருத்துவ பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு என 2 பகுதிகளாக செயல்பட்டு வருகிறது.இதில் ஆங்கில மருத்துவ பிரிவில் நர்த்தனா, பிரதீபா என்ற 2 மருத்துவர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ மையங்களானது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. முதலுதவி மட்டுமின்றி அவசர சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டு, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.இந்த மருத்துவமனை உள்ளே இருப்பதால் வெளியே தெரியும்வகையில் கிரிப்பிரகாரத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த மருத்துவ மையத்தினை பக்தர்கள் மட்டுமின்றி, திருக்கோயில் பணியாளர்கள், பாதுகாப்பு செக்யூரிட்டிகள், தூய்மைப்பணியாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில் ‘‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மருத்துவ முதலுதவி மையம் தேவர் குடிலில் செயல்பட்டு வருகிறது. தற்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப்பணிகளில் கடற்கரை வாசல் அருகே மருத்துவ முதலுதவி மையமும், ராஜகோபுரம் எதிரில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் அமைக்கப்பட உள்ளது.ஏற்கனவே பேட்டரி கார்களும், மினி வேன்களும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு உள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோயிலில் பக்தர்கள் தகவல்கள் பெறுவதற்காகவும், மருத்துவ மற்றும் வாகன வசதிக்காகவும், வசதி குறைபாடு குறித்த புகார்களையும் சம்பந்தப்பட்ட எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.தகவல் நிலையத்தை 04639-242271 என்ற எண்ணிலும், முதலுதவிக்கு 94420 87108 என்ற எண்ணிலும், வீல் சேர் வசதிக்கு 94420 73108 என்ற எண்ணிலும், பேட்டரி கார் வசதிக்கு 94420 89108 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். மேலும் புகார் குறித்த விவரங்களை 70101 70225 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்’’ என்றார்.கடற்கரை வழியில் ஸ்ட்ரெச்சர் வசதிதிருச்செந்தூர் கோயிலில் செயல்பட்டு வரும் மருத்துவ மையத்தில் வீல் சேர்களும், ஸ்ட்ரெச்சர் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் பக்தர்கள் பெரிதும் கடல் அலையில் சிக்கி மீட்கப்படும் போதும், சண்முக விலாசத்தில் அல்லது உள்ளே பிரகாரத்தில் மயங்கி விழுந்தாலோ அவர்களை தூக்கி கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சரை எடுக்க மருத்துவ மையத்திற்கு வரவேண்டி உள்ளது. எனவே கடற்கரை செல்லும் வழியில் ஸ்ட்ரெச்சர்களை வைத்தால் அவசரத்திற்கு பாதிக்கப்படுவோரை உடனடியாக அந்த இடத்திலே மீட்டு சிகிச்சைக்கு மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்ல வசதியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial