மகாராஜா திரைப்படம்//தமிழிலேயே இரு படங்களை ஞாபகமூட்டும்
மகாராஜா தமிழிலேயே இரு படங்களை ஞாபகமூட்டக் கூடும். ஒன்று சித்தா. மற்றது ரிபீட்டடாக வரும் சில சொற்கள், சம்பவத்தை ஞாபகத்தில் கொணரும் அப்பாவி விஜய் சேதுபதியின் பிரபலமான நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம். சித்தாவின் தீம்தான் மகாராஜாவின் தீமும். ஒரு மனிதனுக்கு தனது அதிநேசிப்புக்குரிய பெண் குழந்தை பீடபைலால் வல்லுறவுக்கு உட்டுத்தப்படுதல். வல்லுறவாளன் அன்றாட வாழ்வில் சாதாரண மனிதனாக இருப்பவன். சித்தாவில் இருந்த பிரச்சினையின் தீவிரமும் இயல்பும் மனிதமும் நம்பகத்தன்மையும் மகாராஜாவில் இல்லை. அந்தக் கெடோனில் தலை-முண்டம் சிதறும் காட்சிச் சண்டை வெகுசாதா தமிழ்ப்படக் குரூரம். ஏற்கனவே சிதைந்த குழந்தையை கேசுவலாக இரண்டாவதாகவும் வன்புணரும் அந்த ஐடியாவை யார் அந்தக் கேரக்டருக்குக் கொடுத்திருக்க முடியும், அதன் அவசியம் படத்தில் என்ன என யோசித்துத் தீரவில்லை. வக்கிரம். தனது குழந்தையின் மீதும் தனது இணையின் மீதும் பெரும் நேசம் கொண்ட கொள்ளையன் மிகக் கேசுவலாக பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ஒப்புவதின் தர்க்கமும் புரியவில்லை. மகளை வல்லுறவுக்குப் பலி கொடுத்த ஒருவரது உளவியலுக்கு ஒரு உக்கிரமான இடையறாத கன்சிஸ்டன்சி இருக்கும். படத்தின் முதல் அரைமணிநேரக் காட்சிகள் ஒரு கேலிப்படம் போலத் துவங்குகிறது. இத்தனைக்கும் அப்பால் காட்சியின்பம் தரும் நடிகர்கள் இருக்கிறார்கள். நான் லீனியராகக் கலைத்துப் போட்ட திரைக்கதையை தனக்குள் ஒழுங்குபடுத்தப் பார்வையாளனைப் படத்துடன் இணைக்கும இயக்குனரின் புத்திசாலித்தனம் இருக்கிறது. அறுதி நினைவில் ஒரு சாதா பழிவாங்கும் சண்டைப் படத்தை இயக்குனர் சுவராசியப்படுத்தியிருக்கிறார் என்பதல்லால் மேலதிகமாக உணர ஏதுமில்லை.
.யமுனா ரஜேந்திரன்