உலகத்தின் பார்வை இஸ்ரோ பக்கம்: 5,805 கிலோ எடையுடன் விண்ணில் ஏவப்பட்ட 36 செயற்கைகோள்கள்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோளை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன்படி, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்3 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இந்த எல்.வி.எம் 3 வகை ராக்கெட்டானது இஸ்ரோவின் அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்.
அதுமட்டுமல்லாமல் இஸ்ரோ தயாரித்ததிலிலேயே அதிக எடை கொண்டதும் ஆகும்.
இந்த ராக்கெட்டானது 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது.
திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டானது தாழ்வான புவி சுற்றுவட்டப்பாதைக்கு 8 டன் அளவிலான எடையை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
உலகின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடர்பு சேவைக்காக இந்த செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது.
ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம் 3 ராக்கெட் மூலம் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஒன் வெப் இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் இந்தியாவின் பாரதி நிறுவனத்தின் ஆதரவுடன், அதிவேக, தாமதமில்லா உலகளாவிய தொலைத்தொடர்பு மற்றும் இணைய இணைப்பை வழங்குகிறது.
588-செயற்கைக்கோள் வலுவான வளைய அமைப்பை புவியின் மேல் வட்ட பாதையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 49 செயற்கைக்கோள்கள் கொண்ட 12 வளையங்களில் வைக்கப்படும், ஒவ்வொரு செயற்கைக்கோளும் 109 நிமிடங்களில் பூமியைச் சுற்றி ஒரு முழு பயணத்தை நிறைவு செய்யும்.
இன்று விண்ணில் செலுத்தி உள்ள செயற்கைக்கோள் 18 வது தொகுதி என தெரிவிக்கப்படுகிறது.
LEO குறைந்த பூமியின் சுற்றுப்பாதை இணைப்பின் செயற்கை கோள்கள் சீர் மிகு திறனை வெளிப்படுத்தும் என்றும், இதன் மூலம் உலகளாவிய இடையிலான இணைய இணைப்பை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ராக்கெட்டானது ஏவுவதற்காக ஏவு தளத்தில் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.