தொலைந்து போன தமிழர்களின் தொல் அடையாளங்கள்- 12 (தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி)

சித்திரை தொடக்கம் (எப்ரல் 14ந்தேதி), தமிழ்ப் புத்தாண்டாக தமிழகத்திலும் ,விஷு வாக கேரளத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.
மேற்கண்ட எனது நூலின் 12 ஆம் பகுதியில் சில பகுதிகளை மிகவும்  சுருக்கி இங்கே தருகிறேன்.
தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல்நாளா சித்திரை முதல்நாளா என  கடந்த நூற்றாண்டில் இருந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.நானும் எனது பங்குக்கு தைமுதல் நாளே என தொல்லியல் சான்றுகள் வழியே நிறுவி அதைச் சுருக்கமாக Youtube வழியாகவும் பதிந்திருந்தேன்.
தமிழுணர்வு கொண்ட தமிழறிஞர்கள் பலரும் சித்திரையை ஏற்க மறுப்பதற்குக் காரணம் – தமிழ் ஆண்டுகளாக குறிக்கப்படும் 60 ஆண்டுகளும் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டிருப்பதும் ஒன்றில் கூட தமிழ்ப்பெயர் இல்லாமல் இருப்பதும், கூடுதலாக 60 ஆண்டுகள் உருவான வரலாறாக கிருஷ்ணன்-நாரதர் உறவில் பிறந்த குழந்தைகளே 60  தமிழ் ஆண்டுகள் என்று தவறான, அறிவுக்கொவ்வாத கதை எழுதி வைத்திருப்பதுமே.
நாமும் இந்த இயற்கைக்கு மாறான புராணக் கதைகளை ஏற்பதில்லை.
எனினும் தமிழ் ஆண்டுகளின் எண்ணிக்கையாகக் குறிக்கப்படும் 60 என்ற எண்ணுக்கும் தொல் தமிழருக்கும் உள்ள மறைக்கப்பட்ட தொடர்பை நாம் ஆராய வேண்டுவது நமது கடமையாகும்.
 60 ஆண்டுகள் பட்டியல் , லகத முனிவர் கி.பி. முதல் நூற்றாண்டில் இயற்றிய வடமொழி ஜோதிட வேதாங்கத்தில் விஜய ஆண்டு முதலாகவும் நந்தன ஆண்டு  இறுதியாகவும் குறிக்கப்பட்டுள்ளது.எனினும் இதன் பின் வந்த கி.பி. 6 ஆம் நூற்றாண்டு  வராஹமிகிரர் தனது பிருஹத் ஸம்ஹிதா எனும் நூலில் இந்த ஆண்டுகளின்  வரிசையை பிரபவ ஆண்டை தொடக்கமாகவும் அக்ஷைய ஆண்டை இறுதியாகவும் மாற்றுகிறார்.நாம் இப்போது தையா சித்திரையா என மோதிக் கொள்வதைப் போல அப்போது விஜயவா பிரபவவா என மோதிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
60 ஆண்டுகள் என்பது ஸம்வத்ஸரம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது.இதனை  வடமொழியாளர்கள்  ராசிகளோடு தொடர்பு படுத்தி 12 ஆண்டுகள் என்கிறார்கள். கோள்கள் 12 ராசிகளிலும் அந்தந்த ராசிகளில்  தத்தமது ஒவ்வொரு ஆண்டு இருப்பைப் பூர்த்தி செய்து முடிக்கையில் மொத்தம் 12  ஆண்டுகள் ஆகி இருக்கும் என்றும்  இதுவே ஸம்வத்ஸரம் என்றும் கூறுகிறார்கள். ஆண்டைக் குறிக்கும் இந்த ஸம்வத்ஸரம் எனும் சொல் முதன்முதலில் கி.பி.7 ஆம் நூற்றாண்டில்  சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட  நீலமத புராணத்தில்தான் நமக்குக் கிடைக்கிறது.ஆக எப்படிப் பார்த்தாலும் இந்த ஸம்வத்ஸரம் எனப்படும் 60 ஆண்டு வடமொழி வரலாறு என்பது , தமிழ் மொழியின் சங்கம் மருவிய காலத்தில்தான் வருகிறது.அதாவது கி.பி.முதல்நூற்றாண்டுக்குப் பின் உள்ளதுதான் வடமொழியின் 60 ஸம்வத்ஸரம்.
இனி இந்த வடமொழி 60,  தமிழ்மொழியின் 60 ஐ எவ்வாறு சிதைத்தது என்பதைப் பார்ப்போம்.தமிழ்மொழி ஆண்டுக் கணக்கில் தற்போதைய திருவள்ளுவர் தொடர் ஆண்டு போல் தொன்மையான  தொடர்வருடங்கள் இருந்தனவா என்பதற்கு நமக்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை.தமிழ்மன்னர்களின் கல்வெட்டுகளிலும் அரசனின்  ஆட்சியாண்டே “யாண்டு”இத்தனையாவது  எனக் குறிக்கப்பட்டு வந்தது.பிற்பாடு விக்கிரம சக ஆண்டு/சாலிவாகன சகாப்த ஆண்டு/கொல்லம் ஆண்டு/பசலிஆண்டு/ஹிஜிரி ஆண்டு/கிறித்துவ ஆண்டு என பல தொடர் ஆண்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
வடமொழி 60 ஆண்டு சுழல்முறைக் கணக்கு தமிழ் ஆண்டுகளில் இருந்து”சுடப்”பட்டதே என்பதை நாம் அறியமுடிகிறது. ஸம்வத்ஸர ஆண்டுகள் கிறித்துவுக்குப் பின்பே வடமொழியில் கிடைக்கின்றன. இதை வியாழன் கோளோடு தொடர்பு படுத்தி வடமொழியாளர்கள் தற்போது “கதை”விட்டுக் கொண்டுள்ளனர்.உண்மையில் அனைத்துக் கோள்களின் அறிவும் தெளிவும் தமிழர்களுக்கு கி.மு க்கு முன்பே இருந்த தென்பது மேற்குறிப்பிட்ட வடமொழிக் குறிப்புகளுக்கு முன்பே  நமது சங்க இலக்கியங்களில் கோள்கள்/ மீன்கள் பற்றிய பதிவுகளில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. குறிப்பாக வியாழன் கோள்  பற்றிய குறிப்புகள் கலித்தொகை பரிபாடல் பதிற்றுப்பத்து புறநானூறு ஆகியவற்றில் கிடைக்கின்றன. முத்தாய்ப்பாக இடைச் சங்க நூலான தொல்காப்பியம் வியாழனை  சொல்லதிகார உரிச்சொல் விளக்கத்தில் “வியலென்கிளவி அகலப்பொருட்டே” தொல் -சொல்-உரி-849( 66 ) எனப் பதிவுசெய்து வைத்திருக்கிறது.
சூரியகுடும்பக் கோள்களில் அகன்றதும் பெரியதுமான வியாழன் சூரியனைச் சுற்றி வரும் கால அளவு 12 ஆண்டுகள் என்பதை தொல்தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்.அத்துடன் 5 முழுச் சுற்றுகளில் அதாவது 60 ஆண்டுகளில் ஒரு முறை வியாழன் மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வரும் என்பதும் அப்போது வெள்ளிக்கோளை விட அதிகப் பிரகாசமாக வெறும் கண்ணால்  பார்க்க முடியும் என்பதும் வானியல் அறிவியல். இதை அறிந்து வைத்திருந்த காரணத்தால்தான் மிகப் பெரும் அகண்ட  கோளான வியாழன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு மிக அருகில் வரும் காலத்தைக் கணித்து அதைக் குறித்துக் கொண்டு அடுத்த 60 ஆண்டுகள் கழிந்த மீண்டும் அருகில் வருவதைக் குறித்து பின் இதை ஒரு வியாழச் சுழற்சியாகக் கணித்தனர்.இதற்கு எத்தனை தலைமுறை ஆய்வு நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.  வெறும் கண்ணுக்குத் தெரியும் மிகப் பெரும் கோளான வியாழனின் 60 ஆண்டு பூமி நெருக்கக் காலத்தை 60 ஆண்டுகளாக தமிழர்கள் கணித்தனர்.அந்த 60 ஆண்டுகளுக்கும் நிச்சயம் தமிழ்ப்பெயர்கள்  சூட்டப்பட்டிருந்திருக்கும் .சங்க நாட்களில் கணிக்கப்பட்ட தமிழர்களின் இந்த 60 ஆண்டுகள் பெயர்களை மறைத்து அதற்கு கிருஷ்ணர்-நாரதர்-அவர்களுக்குப் பிறந்த 60 குழந்தைள் எனும் தவறான கதையை உருவாக்கி  அவற்றை சமஸ்கிருதப் பெயர்களாக்கி தமிழ்ப் பெயர்களை அழித்தொழித்தனர் எனலாம்.அதாவது திருமறைக்காடு வேதாரணியம் ஆக்கப்பட்டதைப் போல் தில்லை சிதம்பரம் ஆக்கப்பட்டதைப்போல் திருமுதுகுன்றம் விருத்தாச்சலம் ஆக்கப்பட்டதைப் போல 60 தமிழ்ப்பெயர்ளையும் நிரந்தரமாக அழித்தொழித்து சமஸ்கிருதப் பெயர்கள்  ஆக்கினர் எனலாம்.கி.மு.வுக்கு முந்தைய சங்ககால 60 வியாழச் சுற்று  தமிழாண்டுகள் கி.பி.க்கு பின் சங்கம் மருவிய வடமொழி ஆண்டுகளாயின.வியாழனின்  12 ஆண்டு ஒரு  சூரியச்சுற்று-  மாமாங்கம் எனவும் 48 எனும் 4 சுற்றுகள் மண்டலம் எனவும் தமிழில் வழங்குவதைக் காணலாம்.
இரண்டு மண்டலம் என்பது 48+48= 96. பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் சிவனுக்கு அளிக்கப்பட்ட கால்நடை கொடைகள் 96 ஆடு அல்லது 96 மாடு என்றே அளிக்கப்பட்டுள்ளதைக் காணமுடியும்.
இந்த 60 என்பது வியாழச் சுற்றை அடிப்படையாகக் கொண்டு  கணிக்கப்பட்ட தமிழரின் ஆண்டு அடையாளம் என்பதும் வடமொழியாளர்களுக்கு இதில் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் அவர்கள் 60 எனும்  தொல் தமிழ் அடையாளத்தை  அழித்து தமதாக்கினர் என்பதும் புலனாகிறது.கூடுதல் சான்றாக மெசபடோமிய நாகரீகத்தைச் சொல்லலாம். அங்கு தோன்றிய ஊர் எனும் தலைநகரைக் கொண்ட சுமேரிய நாகரீகம் தமிழர் நாகரீகமே என பல சான்றாதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்ட நிலையில்  சுமேரிய நாகரீகம் 60 எனும் எண் கணிதத்தையே அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன்.தற்கால கணித முறை , பதின்ம/நூறை அடிப்படையாகக் கொண்டது.ஆனால் தொல் தமிழர் நாகரீகம் என அறியப்படும் சுமேரிய நாகரீகம் 60 ஐ அடிப்படையாகக் கொண்டது.பிற்பாடு இந்த 60 முறை பாபிலோனுக்கு கொடையாகக்  கடத்தப்பட்டது.(கீழே சான்று பதியப்பட்டுள்ளது).பாபிலோனிலிருந்து தமிழர் நாகரீகமான  சிந்துவெளிக்குக் கொடையளிக்கப் பட்டது.குமரி முதல் சிந்து ஊடாக மெசபடோமியா வரை பரவியிருந்த (பெருங்கற்கால கல்திட்டைச் சான்றுகள்) தமிழர்களின் – வியாழச் சுற்றின் 60 ஆண்டுகள் கணக்கு,  7000 வருட  தமிழ்த் தொன்மை கொண்டது என்பது புலனாகிறது.நமது வானியல் அறிவின் மீது தொடுக்கப்பட்ட வடமொழித்  தாக்குதல் காரணமாக நாம் நமது அடையாளத்தைத் தொலைத்தோம். சித்திரை முதல்தேதி என்பது சூரியனின்  வடசெலவுக்கும் (உத்தராயணம்) தென் செலவுக்கும்(தட்சிணாயணம்)சரிபாதி காலமான சூரியனின் நேர்கிழக்கு உதயம்.இது நிச்சயமாக தமிழரின்  (கூடவே மலையாளிகளின்)ஆண்டுத் தொடக்கம் அல்ல.மகாராஷ்ட்டிராவில் குடிபாட்வா எனும் பெயரிலும் பஞ்சாப் ஹரியானா மேற்குவங்கத்தில் பைசாகி எனும் பெயரிலும்  புத்தாண்டாகக் கொண்டாடப் படும் சித்திரை மாத சுக்ல பட்ச தொடக்க நாள் தமிழர் புத்தாண்டு என மடைமாற்றமாகிப்போனது.சூரியன் நேர்கிழக்கில் உதயமாகும்  இந்தச் சித்திரை சுக்ல பட்ச  தொடக்க கால நாளை தமிழர்கள் எந்தப் பெயரில் அழைத்தனர் என்பதும் என்ன பெயர் வைத்துக் கொண்டாடினர் என்பதும் அல்லது கொண்டாடவே வில்லையா என்பதும் /வியாழச் சுற்றின் 60 ஆண்டுகளின் உண்மை தமிழ்ப் பெயர்கள் என்ன  என்பதும் நமது வரலாற்றுப் பக்கங்களில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது.நாம் நமது வானியலின் தொல்  அடையாளத்தைத் தொலைத்து நிற்கிறோம் .
Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial