கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய சர்ச்சை.. பயணிகள் அவதி.. சிஎம்டிஏ விளக்கம்
சென்னை ;
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பரில் திறந்து வைக்கப்பட்டதில் இருந்தே கடும் சர்ச்சை எழுந்தது. ரயில் நிலையத்தை திறப்பதற்கு முன்பு பேருந்து நிலையத்தை திறந்தது, ஜிஎஸ்டி சாலையை கடக்க மேம்பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை அவசர கதியில் திறந்தது, சென்னை மக்கள் ஊருக்குள் செல்ல 30 கிமீ தூரம் செல்ல வேண்டும், டவுன் பஸ் ஏறவே அரை கிமீ சுற்றி செல்ல வேண்டும், போதிய கடைகள் மற்றும் ஏடிஎம்கள் இல்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அதேநேரம் பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு குறைகளை படிப்படியாக சரி செய்ய தொடங்கியது தமிழக அரசு. கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை 1 முதல் 5-வது நடைமேடை வரை தொலைதூரம் செல்லும் பஸ்களை இயக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனுமதிக்கப்படுகின்றன. மீதமுள்ள நடைமேடைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலைய முகப்பு பகுதிக்கு சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நடைமேடைகளுக்கு செல்லும் வகையில்,நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் புறநகர் பஸ்கள் இயக்கப்படும் வழக்கமான பாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால் 1-வது நடைமேடை வழியாக பஸ்கள் இயக்கப்படும் வகையில் அவசர கால பாதையும் இருக்கிறது. மாநகர பஸ் நிலையத்தின் வடகிழக்கு மூலையையொட்டி புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அந்த அவசர கால பாதை வழியாக பொதுமக்கள் செல்லும் வகையில் படிக்கட்டு ஒன்றும் சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த முக்கியமான அவசர கால பாதையானது இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தை எளிதாக சென்று அடைய முடியாத பயணிகள், புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி மீண்டும் ரவுண்டு அடித்து வர வேண்டிய நிலை இருப்பதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர். மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு அவசர கால வழியில் சென்றால், புறநகர் பஸ் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு செல்லாமலே மக்கள் நேரடியாக புறநகர் பஸ்களை அடைய முடியும். எனவே கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த அவசர கால பாதையை தகரம் வைத்து அடைத்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள கூறியுள்ளதாவது: “சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், ‘மாநகர பஸ் நிலையத்தில் இருந்து தற்போது பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் பஸ் நிலையத்தின் பிரதான கட்டிடத்திற்கும் புறநகர் பேருந்து நிலையத்திற்கும் சென்று வருகின்றனர். இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புப்பாதையில் இருந்து மிக அருகில் புறநகர் பஸ் முனையத்தின் முதலாவது நடைமேடை அமைந்துள்ளது.அங்கு அரசு விரைவுப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட பகுதியானது தொடர்ந்து பஸ்கள் சென்று வரும் இடமாகும். அங்கு பயணிகள் நடந்து செல்வதற்கான நடைபாதை வசதிகளும் ஏற்படுத்த இயலாது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புப்பாதையையும், முதலாவது நடைமேடைக்கு செல்லும் வழியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேருந்து நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரங்களில் வரும் குடிநீரை பயணிகள் கை கழுவவும் பயன்படுத்துவதாக புகார் வரப்பெற்றதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் 10 இடங்களில் கைகழுவும் அமைப்புகள் ஏற்படுத்த ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டு விரைவில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது” இவ்வாறு கூறியுள்ளார்.