நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை; கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்ததாக கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மிதார் மொய்தின் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயவேல், நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டைனையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எஸ்.வி.சேகர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.