ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடர் – முழு விவரம்…

ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 2008-ல் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வாகை சூடியது.

உந்த நிலையில் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை நீடிக்கும் இந்த கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் மொத்தம் 1லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போட்டி பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து விட்டதால் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் களம் காண இருப்பது கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது.

முதல் ஆட்டத்தில் யார்-யார்?

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.

கடந்த ஆண்டில் முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதுடன் கடைசியில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி அந்த மோசமான நிலைமையை மாற்றி வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் வியூகங்களை தீட்டி வருகிறது. 41 வயதான கேப்டன் டோனிக்கு அனேகமாக இது தான் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு மட்டையை சுழற்ற வருவதால் அவரது தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பு போல் முத்திரை பதிப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இன்னும் 22 ரன் எடுத்தால் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள். அம்பத்தி ராயுடு, ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலுசேர்க்கிறார்கள். ரூ.16¼ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கால் முட்டி பிரச்சினையால் தொடக்க கட்ட ஆட்டங்களில் பந்து வீசமாட்டார். ஒரு வகையில் இது பின்னடைவு தான். அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட உள்ளார். பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ் பாண்டே நம்பிக்கை அளிக்கிறார்கள்.

குஜராத் எப்படி?

கடந்த ஆண்டு அறிமுக அணியாக அடியெடுத்து வைத்து எல்லா அணிகளையும் பதம் பார்த்து கடைசியில் கோப்பையையும் வென்று வரலாறு படைத்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் நட்சத்திர பட்டாளத்துக்கு குறைவில்லை. சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என்று மேட்ச் வின்னர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இதில் டேவிட் மில்லர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் நெதர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடுவதால் முதல் இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார்.

கடந்த சீசனில் நடந்த இரு லீக்கிலும் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அமர்க்களப்படுத்திய குஜராத் அணி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. அதே சமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டோனி படை வரிந்து கட்டும். இதனால் தொடக்க ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

பரிசுத்தொகை

போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை ஐ.பி.எல். நிர்வாகம்அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. என்றாலும் கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு (தகுதி சுற்றில் தோற்கும் அணி) ரூ.7 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு (வெளியேற்றுதல் சுற்றில் தோற்கும்அணி) ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது.

அத்துடன் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி கவுரவத்துடன் ரூ.15 லட்சமும், அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும் கிடைக்கும்.

‘ஜியோ சினிமா’

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டெலிவிஷனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதற்கான டிஜிட்டல் உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை இணையதளத்தில் ‘ஜியோ சினிமா’வில் வர்ணனையுடன் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

கவனத்தை கவரும் புதிய விதிகள்

இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்’ (இம்பேக்ட்) என்ற புதிய விதிமுறை அறிமுகமாகிறது. இதன்படி ஆட்டத்தின் போது எந்த ஒரு கட்டத்திலாவது ஒரு வீரரை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை களம் இறக்கலாம். அந்த மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசலாம். இது ஆட்டத்தின் போக்கு, சூழலுக்கு தக்கப்படி கூடுதலாக ஒரு பவுலரையோ அல்லது பேட்ஸ்மேனையோ பயன்படுத்த வழிவகை செய்கிறது. நிச்சயம் இந்த விதிமுறை ஐ.பி.எல். தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்களின் ஆவல் எகிறியுள்ளது. ஆனால் ‘டாஸ்’ போடும் போதே மாற்று வீரர்களின் 4 பேர் பட்டியலை கொடுத்து விட வேண்டும்.

வழக்கமாக ‘டாஸ்’ போடுவதற்கு முன்பாக ஆடும் 11 வீரர்களின் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்களும் பரிமாறிக் கொள்வார்கள். அதில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இனி ‘டாஸ்’ போட்ட பிறகு 11 வீரர்களை இறுதி செய்யும் நடைமுறை இந்த ஐ.பி.எல்.-ல் புதிதாக வருகிறது.

விக்கெட்டுக்கு மட்டுமின்றி வைடு அல்லது நோ-பால் நடுவர் வழங்கியதில் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது அவற்றை வழங்க கோரியோ டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்யவும் இந்த முறை அனுமதிக்கப்படுகிறது.

10 அணிகளின் வீரர்கள் பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், சுப்ரன்ஷூ சேனாபதி, அம்பத்தி ராயுடு, அஜிங்யா ரஹானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிரிட்டோயரிஸ், மிட்செல் சான்ட்னெர், பகத் வர்மா, மொயீன் அலி, ஷிவம் துபே, பென் ஸ்டோக்ஸ், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், தீபக் சாஹர், தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷர் தேஷ்பாண்டே, மதீஷா பதிரானா, சிசாண்டா மகாலா, ஆகாஷ் சிங்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ரோமன் பவெல், ரிபல் பட்டேல், சர்ப்ராஸ் கான், யாஷ் துள், அமன் கான், பில் சால்ட், மனிஷ் பாண்டே, ரிலீ ரோசவ், அக்ஷர் பட்டேல், லலித் யாதவ், மிட்செல் மார்ஷ், கமலேஷ் நாகர்கோட்டி, பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், அன்ரிச் நோர்டியா, சேத்தன் சகாரியா, குல்தீப் யாதவ், லுங்கி இங்கிடி, முஸ்தாபிஜூர் ரகுமான், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா, முகேஷ் குமார்.

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டேவிட் மில்லர், சுப்மன் கில், மேத்யூ வேட், விருத்திமான் சஹா, கேன் வில்லியம்சன், உர்வில் பட்டேல், கே.எஸ்.பரத், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஒடியன் சுமித், ஜெயந்த் யாதவ், பிரதீப் சங்வான், ராகுல் திவேதியா, ஷிவம் மாவி, அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷ் லிட்டில், மொகித் ஷர்மா, அபினவ் மனோகர், நூர் அகமது, யாஷ் தயாள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ரமனுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (காயத்தால் அவதி) என்.ஜெகதீசன், லிட்டான் தாஸ், மன்தீப் சிங், டேவிட் வைஸ், அனுகுல் ராய், ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், ஷகிப் அல்-ஹசன், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் ஷர்மா, லோக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், ஹர்ஷித் ராணா, டிம் சவுதி, ஷர்துல் தாக்குர், சுனில் நரின், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: லோகேஷ் ராகுல் (கேப்டன்), மனன் வோரா, குயின்டான் டி காக், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, கிருஷ்ணப்பா கவுதம், கரண் ஷர்மா, குருணல் பாண்ட்யா, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ். ரொமாரியோ ஷெப்பர்டு, டேனியல் சாம்ஸ், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், யுத்விர் சிங், அவேஷ் கான், மயங்க் யாதவ், மொசின் கான், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், யாஷ் தாக்குர், அமித் மிஸ்ரா, நவீன் உல்-ஹக், மார்க்வுட்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, ரமன்தீப் சிங், டிம் டேவிட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், விஷ்ணு வினோத், அர்ஜூன் தெண்டுல்கர், ஜோப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹல் வதேரா, டுவான் ஜேன்சன், ஹிருத்திக் ஷோகீன், குமார் கார்த்திகேயா, பியுஷ் சாவ்லா, ஆகாஷ் மாத்வால், ஜாசன் பெரன்டோர்ப், ராகவ் கோயல், டிவால்ட் பிரேவிஸ்.

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஹர்பிரீத் சிங், அதர்வா டெய்ட், ராஜ் பாவா, ரிஷி தவான், சாம் கர்ரன், சிகந்தர் ராசா, மொகித் ரதீ, ஷிவம் சிங், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், பல்தேஜ் சிங், ககிசோ ரபடா, நாதன் எலிஸ், ராகுல் சாஹர், வித்வாத் கவேரப்பா, மேத்யூ ஷார்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மயர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், ரையான் பராக், குணல்சிங் ரதோர், டோனவன் பெரீரா, ஜோ ரூட், ஆர்.அஸ்வின், ஜாசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஸ்ட், அப்துல் பாசித், கே.சி.கரியப்பா, குல்தீப் சென், குல்டிப் யாதவ், நவ்தீப் சைனி, கே.எம்.ஆசிப், டிரென்ட் பவுல்ட், முருகன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, ஒபெட் மெக்காய், சந்தீப் ஷர்மா.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), பின் ஆலென், விராட்கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், ஹசரங்கா, கரண் ஷர்மா, சோனு யாதவ், மனோஜ் பண்டாகே, ஹர்ஷல் பட்டேல், ஷபாஸ் அகமது, ஆகாஷ்தீப், ஹேசில்வுட் (காயம்), ரஜத் படிதார் (காயம்), சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ரீஸ் டாப்லே, ஹிமான்ஷூ ஷர்மா, ராஜன் குமார், அவினாஷ் சிங், பிரேஸ்வெல்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்: மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென், அன்மோல்பிரீத் சிங், உபேந்திரா யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜேன்சன், வாஷிங்டன் சுந்தர், விவ்ராந்த் ஷர்மா, மயங்க் தாகர், சமர்த் வியாஸ், சன்விர் சிங், புவனேஷ்வர் குமார், பசல்ஹக் பரூக்கி, கார்த்திக் தியாகி, டி.நடராஜன், உம்ரான் மாலிக், அகீல் ஹூசைன், அடில் ரஷித், மயங்க் மார்கண்டே.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி இடது கால்முட்டி பிரச்சினையால் நேற்று பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்த்தார். இதனால் அவர் தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற சந்தேகம் கிளம்பியது. ஆனால் அவர் இந்த ஆட்டத்தில் ஆடுவது உறுதி என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை அணியில் காயத்தால் பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மார்க்ரம் சர்வதேச போட்டி காரணமாக ஐ.பி.எல்.-ல் தங்கள் அணிக்குரிய முதல் ஆட்டத்தை தவற விடுகிறார். அந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கேப்டனாக புவனேஷ்வர்குமார் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *