நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய சுவாரசியங்கள்; பலருக்கும் தெரியாத தகவல்கள்…!!!
பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர் இந்திரா காந்தி, சந்தித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk’!?” என பக்கத்தில் உள்ளவரிடம் குறுநகையுடன் கேட்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக ‘சில்க் ஸ்மிதா’ என பெயர் மாற்றப்பட்டது. உதிரி உதிரியாய் வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் சில்க் ஸ்மிதா ஒரு மின் மினி பூச்சி. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக காட்டியது. அசோக்குமாரின் ‘அன்று பெய்த மழை’ பன்முகத் திறமை கொண்ட நடிகையாக்கியது.
சில்க் ஸ்மிதாவின் நடனத்திறமைக்கு விளக்கமேத் தேவையில்லை.1980களில் ஸ்மிதா இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். ரஜினி, கமல் போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா? என்று கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன் ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா? என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு பணியையே தொடங்குவார்கள்.கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம் பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை. உடையைத் தேர்வுசெய்வதில் தொடங்கி, அதனை உடுத்தும் விதம், நடக்கும் விதம், உடைக்கும் உடலுக்கும் ஏற்ற நகைகளைத் தேர்ந்தெடுக்கும் கலைத்தன்மை எனக் கைதேர்ந்த ரசனைக்காரர் சில்க்.தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக எண்ணினார். திரைப்படங்களில் சில்க் ஸ்மிதா அவர்களின் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர், ஹேமமாலினி. சில்க் கொடுத்திருந்த பேட்டிகளில் அவருடைய நிஜக் குரலை கேட்டால் யாரும் இவருக்கு ஹேமமாலினி டப்பிங் பேசியிருக்கிறார் என நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு இருவரின் குரலும் ஒரே மாதிரியாக இருக்குமாம்.சில்க் ஸ்மிதா அவர்களுக்கு, நடிகை ‘சாவித்திரி’யை ரொம்ப பிடிக்கும். சாவித்திரி அவர்கள் மாதிரி நடிப்பில் சாதிக்கணும்னு தான் ஆசைப்பட்டார். கவர்ச்சியா நடிக்கணும் என்பது சில்க் ஸ்மிதா அவர்களின் ஆசையில்லை. பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப்பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது சில்க்ஸ்மிதாவின் கனவு. ஆனா, சினிமா உலகம் சில்க் ஸ்மிதா அவர்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டும்தான் பார்த்தது.சென்னை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில் வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது, ‘ஸ்கூலுக்கு போங்கடா ஒழுங்கா..!’ என்றெல்லாம் அறிவுரை கூறுவாராம்.தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க் ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் கூட, உள்ளேயிருந்து அடுத்த நிமிடம் பந்து வெளியே வீசப்பட்டு விடுமாம்.நடிப்புலக ஜாம்பவான் அவர். ஷூட்டிங்குக்கு வந்த அவர் முன் சில்க் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். ‘இது நியாயமா?’ என ஷூட்டிங் ஸ்பாட்டில் கேள்வி எழ, ”நான் அவரை மனதால் மதிக்கிறேன்; காலால் அல்ல!” என்றார் சில்க். இந்தக் கம்பீரம் ஒரு பக்கம் என்றால், லிபர்ட்டி மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு, சாதாரண பெண்மணியாகக் காய்கறி வாங்கும் எளிமைக்கும் அவரிடத்தில் குறைவு இல்லை.’பாண்டிச்சேரியில் ‘பிக்பாக்கெட்’ பட ஷூட்டிங்… ஆயிரக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்க நிற்கிறாங்க. காரைவிட்டு இறங்கினால், சில்க்கைக் காப்பாத்துறது கஷ்டம். நிலைமையை கண்டுக்கவே கண்டுக்காம சட்டுனு காரைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டார். இன்றைய நடிகைகள் யாருக்குமே அப்படி ஒரு தைரியம் வராது. பிரசித்தியைப் பணம் ஆக்கத் தெரியாதவர். நாய்களோடு விளையாடும்போது தான் அவருடைய நிஜமான மகிழ்ச்சி தெரியும். அந்த அளவுக்கு மனமொன்றி விளையாடுவார் என்று சில்க் ஸ்மிதா பற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்,
இயக்குனர் வேலு பிரபாகரன்.என் கணவர் நடன இயக்குநரா வேலை செய்த கன்னடப் படத்தில், ஸ்மிதாவுக்கு நான் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தேன். ஷூட்டிங் முடிச்சு அவ முன்கூட்டியே சென்னை வந்துட்டா. ஒருநாள் இரவு எனக்கு போன் பண்ணி, ‘என் வீட்டுக்கு வா… உன்கிட்ட அவசரமா பேசணும்’னு ஸ்மிதா ரொம்பவே வலியுறுத்திக் கூப்பிட்டா. ‘கர்நாடகாவுல இருந்து சதீஷ் வீட்டுக்கு வந்திட்டிருக்கார். அவருக்குச் சாப்பாடு ரெடி பண்ணணும். போன்லயே விஷயத்தைச் சொல்லு. ரொம்ப அவசரம்னா வீட்டுக்கு வர்றேன்’னு அவகிட்ட சொன்னேன். ‘பரவாயில்லை, நாளைக்கு வா…’னு சொன்னா. அதனால நானும் அமைதியா விட்டுட்டேன்.அடுத்த நாள் ஸ்மிதா தற்கொலை நியூஸ் பார்த்துட்டு அலறியடிச்சு அவ வீட்டுக்கு ஓடினேன். அவ உடலை நேரில் பார்த்து கதறி அழுதேன். முந்தின இரவில் நான் அவளைச் சந்திக்கப் போயிருந்தா, பிரச்னையைக் கேட்டு தற்கொலை எண்ணத்தைத் தடுத்திருக்க முடியும்.
அந்தக் குற்ற உணர்வில் இப்போவரை தவிக்கிறேன் என்கிறார் நடிகை அனுராதா.சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் தூக்குப் போட்டு இறந்தார்.சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக் கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்பட்டிருந்தார். தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலை பெற்றுக்கொண்டனர் எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.தனது தற்கொலைக்கு முந்தைய சில மாதங்களில் சில்க்கின் கண் பேசிய வார்த்தைகள் யாருக்கும் புரியாமல் போனதுதான் சோகம். தன் இறப்புக்கு முன்னதாக சில்ஸ் ஸ்மிதாவே கைப்பட எழுதியதாக சமூக வலைதளங்களில் உதவுகிறது. காதல் தோல்வி இன்னும் பல சூழ்நிலைகள் அவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. ”தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்” என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர்.
சின்ன, சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகிடுற குணம் தான் அவரோடு தற்கொலைக்கே காரணமாக இருக்கலாம் என்கிறார் சினிமா பிரமுகர் ஒருவர்.தான் சம்பாதித்த பணத்தை பண்ணையார்களுக்கு எதிராக போராடிய ஆந்திர மக்களுக்கு நிதியாக வாரி வழங்கிய சில்க்ஸ்மிதாவின் மற்றொரு முகம் பலரும் அறியாத ஒன்று.உதவி என யார் போய் நின்றாலும் கையில் இருப்பதை அப்படியே கொடுத்துவிட்டு நன்றி என்ற வார்த்தையைக்கூட எதிர்பார்க்காமல் கடந்துபோய்விடுவார். தான் சினிமாவுக்கு முயற்சி செய்த காலத்தில் தயாரிப்பாளர்களை அறிமுகப்படுத்திய ஒரு தாடிக்காரருக்குத் தன் வாழ்க்கையையே கொடுத்து நன்றிக் கடனை நிவர்த்தி செய்தவர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவருக்கு அலாதி ஆசை. அதற்காகவே ஒரு ஆங்கிலோ இந்தியனை ஏற்பாடு செய்திருந்தார். ஸ்டைலாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு நன்றாகக் கற்றுக்கொண்டார்.
எதன் மேல் ஆசைப்பட்டாலும் அதை அடைய உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்படுவது சில்க்கின் வழக்கம்.’கடைசிக் காலத்துல சில்க் சம்பாதிச்சதெல்லாம் குடும்பத்துக்காக விரயமாகிக் கொண்டு இருந்தது. அதைப் பத்தி சிலர் அக்கறையோடு சொன்னபோது, ‘சம்பாதிக்கிறது எதுக்கு? செலவு பண்ணத் தானே!’னு அசால்ட்டா கேட்டாங்க. இள வயதில் அவங்க எதை இழந்தாங்களோ, அதை நோக்கி அவங்க கவனம் திரும்பியதுதான் மரணம் வரை அவங்களைக் கொண்டுவந்து நிறுத்திடுச்சு. ஆனால், ஒரு கவர்ச்சி நடிகையா இருந்தாலும், மனசுல நினைச்ச அன்புக்கு அவங்க எந்த அளவுக்கு நேர்மையா இருந்தாங்க என்பதற்கு பேரு, புகழ் எல்லாத்தையும் மறந்துட்டு அவங்க தேடிக்கிட்ட அந்த மரணமே சாட்சி!” என்கிறார் கடைசிக் காலத்தில் சில்க்கின் நண்பராக இருந்த சினிமாக்காரர் ஒருவர்.சில்க்கின் இரக்க குணத்தைப் பளிச்செனச் சொல்ல இந்த ஒரு சம்பவம் போதும்… ‘ராஜாளி’ ஷூட்டிங் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்த நேரம்.
அப்போ, நண்டு மாதிரியான வித்தியாச உருவம்கொண்ட ஒரு மீனைப் பிடிச்சுக் கயிறு கட்டி இழுத்து சில பசங்க விளையாடி இருக்காங்க. அப்போ, கடற்கரையோரம் நடந்து போயிட்டு இருந்த சில்க் திடீர்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க. யூனிட்ல உள்ளவங்களுக்கு ஒண்ணும் புரியலை. என்னவோ… ஏதோனு நினைச்சு எல்லாரும் பதறி ஓட, ‘அந்த மீனைக் காப்பாத்துங்க… கயிறு கட்டி இழுக்கிறதால, அதோட உடம்பு முழுக்கக் காயமாகிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப்போற அந்த மீனை எப்படியாச்சும் காப்பாத்துங்க’னு கதறிட்டு இருந்தார் சில்க். ‘இது ஒரு விஷயமா மேடம்?’னு யூனிட்ல இருந்தவங்க சாதாரணமா சொல்ல, சில்க்குக்கு அழுகையோட ஆத்திரமும் வந்திடுச்சு. ‘அதுவும் ஒரு உயிர்தானே சார்… உங்க கழுத்துல கயித்தைப் போட்டு இறுக்கினா உங்களால தாங்க முடியுமா? அப்படித்தானே அந்த மீனுக்கும் வலிக்கும்… ப்ளீஸ் சார்… எப்படியாச்சும் அந்த மீனைக் காப்பாத்துங்க’னு மறுபடியும் அழுதாங்க. யூனிட் ஆட்கள் அந்த மீனைக் கடலுக்குள்ள விட்டதுக்கு அப்புறம்தான் அவங்க ரிலாக்ஸ் ஆனாங்க. அப்படி ஒரு மீனுக்காகத் துடிச்சவங்க தன் கழுத்துலயே கயித்தை மாட்டிக்கிட்டதுதான் பெரிய துயரம்!கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன் என்ற பழமொழி சில்க் ஸ்மிதாவிற்கு கன கச்சிதமாக பொருந்தும் ஒன்று.எந்தத் தலைமுறை தமிழ் இளைஞனின் கனவிலும் இடம் பிடிக்கும் கனவுக் கன்னி. சொல்லப்போனால், ‘கனவுக் கன்னி’ என்ற வார்த்தையை முழுமையாக்கிய தமிழகத்தின் மர்லின் மன்றோ. தனது தற்கொலைக்கு முந்தைய சில மாதங்களில் சில்க்கின் கண் பேசிய வார்த்தைகள் யாருக்கும் புரியாமல் போனதுதான் சோகம்!அபார நடனத் திறமையாலும் , கண்களின் வசீகரத்தாலும் குணச்சித்திர வேடங்களாலும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தென்னகத் திரைப்பட உலகையே சில்க் ஸ்மிதா பல ஆண்டு காலம் கட்டிப் போட்டிருந்தார். இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் வழியாக அந்த வசீகர கண்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.