வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எத்தனை இடங்களை பிடிக்கும்; அமித்ஷா தகவல்!
ரூ.1,950 கோடி வளர்ச்சி பணி
குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சியில் ரூ.1,950 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடியை 3-வது முறையும் ஆட்சியில் அமர்த்துங்கள். அவரது தலைமையில், நாடு மிகவேகமாக வளர்ச்சி அடையும்.
370 தொகுதிகளில் வெற்றி
நான் கடந்த மாதம் 11 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். நாடாளுமன்ற தேர்தலில் யாரை தேர்ந்து எடுப்பது என்பதில் மக்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. எனவே வருகிற தேர்தலில் பா.ஜனதா மட்டும் 370 தொகுதிகளில் வெற்றிபெறும் என்ற மனநிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. அதே நேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்.
பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளார். கற்பனை செய்ய முடியாத இலக்குகளை நிறைவேற்றி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மோடியை நாட்டின் பிரதமராக மக்கள் தேர்ந்தெடுத்தது ‘குஜராத் மாடல்’ ஆட்சிதான் முக்கிய காரணம்.
உலகின் முதல் இடத்தில் இந்தியா
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை வகுத்தார். இன்னும் 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, 2047-ம் ஆண்டு. இந்தியா உலகில் முதலிடத்தை எட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
உலக அளவில், இந்தியப் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியது. இதன் மூலம் சுமார் 550 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.