துணிவு பட பாணியில் துணிகரம்; 1½ கிலோ நகைகள் கொள்ளை!!!
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் பாப்பாநாயுடுப்பேட்டை பஜார் தெருவில் செயல்பட்டு வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான தங்க நகைக்கடையில் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இந்த நகைக்கடைக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இந்த நிலையில் தங்க நகைகள் வாங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் கடையின் முன்னால் அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் நம்பர் பிளேட் இல்லாத 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கினர். அவர்கள் கடைக்குள் புகுந்து கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். இதைப் பார்த்த நகைக்கடையின் உரிமையாளர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். அப்போது 3 பேரில் ஒருவர் உள்பக்கமாக ஷட்டரை பாதியளவு மூடி விட்டு யாராவது சத்தம்போட்டால் சுட்டு விடுவேன் என மிரட்டினார். மீதி 2 பேர் தங்களிடம் இருந்த சுத்தியலால் நகைகள் வைத்திருக்கும் ஷோகேஸ் ரேக்குகளை உடைத்து 1½ கிலோ எடையிலான தங்க நகைகளை கொள்ளையடித்தனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் ஏர்ப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிடிபட்டவரை கைது செய்தனர். கைதான கொள்ளையன் ரேணிகுண்டா பகுதியைச் சேர்ந்த விஸ்வா (வயது 28) என்று தெரிய வந்தது. மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.