“பள்ளிகளில், கற்பித்தலை பாதிக்கும், பிற பணிகளுக்கு முக்கியத்துவத்தை கைவிட வேண்டும்என தமிழ்நாடுஅரசை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
“பள்ளிகளில், கற்பித்தலை பாதிக்கும், பிற பணிகளுக்கு முக்கியத்துவத்தை கைவிட வேண்டும்என தமிழ்நாடுஅரசை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
கல்வித்துறையின் குறுக்கீடுகளால் பள்ளிகளில் இரண்டாம் பருவ கற்பித்தல் பணி தேக்கம். இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கல்வித் திறன் வெகுவாக பின் தங்கும். பள்ளிகளில் பிற பணிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கைவிட வேண்டும்என தமிழ்நாடுஅரசை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
2023-24 ஆம் கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ கற்பித்தல் பணிகள் நடுநிலைப்பள்ளிகளில் அக்டோபர் 3ஆம் தேதியும், தொடக்கப்பள்ளிகளில் அக்டோபர் 9ஆம் தேதியும் தொடங்கியது. இன்று அக்டோபர் 17 தேதி ஆகியும் இதுவரை பள்ளிகளில் கற்பித்தல் பணியை முழுமையாக தொடங்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கு கருத்தாளர் பயிற்சி, திறன் தேர்வு, கலைத்திருவிழா என வரிசை கட்டிய பல்வேறு கூடுதல் பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதால், முறையான கற்பித்தல் பணி தொடங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையால் வழங்கப்படும் இத்தகைய பயிற்சிகளால் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களோ அல்லது குறைந்தது ஒரு ஆசிரியரோ, பள்ளியை விட்டு வெளியில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளிகளில் குறைந்த ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பகுதி மாணவர்களுக்கு கற்பித்தல் பணி இதுவரை தொடங்கப்படவே இல்லை. மற்றொரு பகுதி மாணவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் முழுமையாக பள்ளியிலிருந்து கற்பித்தல் பணியில் மேற்கொள்ளப்படாததால் மாணவர்களின் இரண்டாம் பருவ கற்றல் அடைவுகள் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளிகளில் தினந்தோறும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பரபரப்பாக காட்டிக் கொண்டால் தமிழகம் கல்வியில் சிறப்புடன் இருப்பதாக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இத்தகைய செயல் திட்டங்கள் திணிக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் கல்வி நிலை 23 வது இடத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கல்வி நிலை கடைசி இடத்திற்கு சென்றுவிடும். பள்ளிகளில் பருவத்திட்ட பாடப்பொருள் கற்பித்தல் பணியை நிறைவடைந்த பின்னரே கலை திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் கற்பித்தல் பணி தொடங்கும் நாட்களிலேயே கலைத்திருவிழாக்களையும் நடத்துவது பொருத்தமானதாக இருக்காது. இதனை கல்வித்துறை உயர அலுவலர்கள் உணர வேண்டும். கற்பித்தல் பணி நிமித்தம் களத்தில் மாணவர்களோடு இருந்து வரும் ஆசிரியர்கள் கூறுகின்ற கருத்துகள், மாணவர் நலன், கல்வி நலன் இவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் முன்வைக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை அதிகாரிகளுக்கு வர வேண்டும். மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை எப்படி மேற்கொள்ள வேண்டும்? எந்த வழியில் செயல்படுத்த வேண்டும்? என ஆசிரியர்கள் முடிவு செய்வதே சரியானதாக இருக்கும். அதை விடுத்து குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கொண்டு கற்பனைக் குதிரையை தட்டி விட்டு அதனை எல்லாம் திட்டங்களாக செயல்படுத்தி காட்டலாம். இதன் மூலம் பள்ளிகளில் பரபரப்பை உருவாக்கி, அதன்மூலம் கல்வித்துறை ஆக்கபூர்வமாக செயல்படுகிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்கலாம் என நினைக்கும் உயர் அலுவலர்களின் போக்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமீபகாலமாக கல்வி கற்பித்தல் பணியில், அதற்கு எதிரான அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். இதனால் மிகப்பெரிய கற்றல் இடைவெளி ஏற்படுவதற்கான சூழல் அமைந்து விடும். இதனால் ஏற்படும் பின்னடைவு ஆட்சியாளர்களையே சென்றடையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் கல்வித்துறையில் முழுமையான கண்காணிப்பை செலுத்தி கல்வித்துறையையும், கற்பித்தல் பணியையும் மேம்படுத்த வேண்டும். கற்பித்தல் பணியில் ஏற்படுத்தப்படும் குறுக்கீடுகளை நிறுத்த வேண்டும். ஆக்கபூர்வமான கற்பித்தலுக்கு உதவும் திட்டங்களை கல்வியாளர்களைக் கொண்டு உருவாக்கி வழங்கிட வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூறுவதற்கு காரணமாக இருந்தவர்களே, அதன் பிற்போக்கு நிலைக்கும் காரணமாக அமைந்தார்கள் என்ற பழிச்சொல் நமக்கு வந்து விடக்கூடாது. எனவே பள்ளிகளில் கற்பித்தல் பணி அல்லாத பிற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையினை கைவிட்டு தமிழக பள்ளிகளின் கற்பித்தல் நிலையை மேம்படுத்த வேண்டும் என தமிழ் நாடு அரசைகேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பொது செயலாளர் ந.ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளார்,
ந.ரெங்கராஜன்,
பொதுச்செயலாளர், TESTF
இணைப் பொதுச்செயலாளர், AIPTF பொதுச்செயலாளர், WTTC