எண்ணூர் போராட்டத்திற்கு பா.ம.க. முழு ஆதரவு; ஆலையை மூட அன்புமணி வலியுறுத்தல்! 

சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தனர். உர ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு, ஆலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அதன் விசாரணையை முடித்து தற்காலிக அறிக்கையையும், முழு அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்து விட்டது. அந்த அறிக்கையை மக்கள் பார்வைக்கு வெளியிடவோ, அதன் மீது நடவடிக்கை எடுக்கவோ தமிழ்நாடு அரசின் சார்பில் எந்த முன்முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக கோரமண்டல் உர ஆலை நிர்வாகமானது, அரசு அமைத்த வல்லுனர் குழுவை பயன்படுத்தி, தனது தவறுகளையும், குற்றங்களையும் துடைத்துக்கொள்ள முயல்கிறது. வல்லுனர் குழு தமிழக அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு ஒப்புதல் அளித்து விட்டதாக வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்படுவது தொடர்கதையாகி விட்டதால், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்காக எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எண்ணூர் பகுதி மக்களின் அறவழி போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது. எனவே, கோரமண்டல் உர ஆலையில் வல்லுனர் குழு நடத்திய ஆய்வு குறித்த விவரங்களையும், அதன் அடிப்படையில் அக்குழு தாக்கல் செய்த அறிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு தமிழக அரசு வெளியிட வேண்டும். வல்லுனர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை மதித்து கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial