கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்..மூத்த குடிமக்களுக்கு ‘பந்தம்’ சேவை! சென்னை போலீசின் புது முயற்சி..!
சென்னை: 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது. ஒரு உதவி எண்ணில் அழைத்து முதியவர்கள் பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காவல் நெட்வொர்க்குகளில் சென்னை பெருநகர காவல் துறையும் ஒன்று. சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம் விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு சேவைகளில் சென்னை காவல்துறை சிறந்து விளங்கி வருகிறது. பொருளாதார குற்றங்கள், போக்குவரத்து விழிப்புணர்வு என பல்வேறு விவகாரங்களில் விழிப்புணர்வையும் சென்னை காவல்துறை ஏற்படுத்தி வருகிறது. இணையதள விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் என சென்னை காவல்துறை எப்போதும் அப்டேட் ஆகவே இருக்கும். இந்த நிலையில் தான் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சென்னை காவல்துறையின் இந்த அறிவிப்பு வீட்டில் தனியே வசிக்கும் முதியவர்கள், குடும்ப வன்முறையை சந்திக்கும் மூத்த குடிமக்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் இருக்கிறது. அதாவது 75 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு உதவும் வகையில் பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல் துறை தற்போது அறிவித்துள்ளது. 9499957575 என்ற தொலைபேசி எண்ணை மூத்த குடிமக்கள் அழைத்து உதவி கோரலாம். அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உதவி, மருத்துவ சேவை, மனநல ஆலோசனை, சட்ட ஆலோசனை வழங்கப்படும் எனவும் 24 மணி நேரமும் இந்த எண்ணை அழைத்து சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. பல்வேறு சூழல் காரணமாக தனியாக வசிக்கும் முதியவர்கள் மன உளைச்சலாலும் உடல் நலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படும்போது அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மேலும் தனிமையில் வாடும் முதியவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கும் நிலையும் உள்ளது. இதனை களையும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் சென்னை காவல்துறைக்கு பலரும் நன்றியையும் பாராட்டுதல்களையும் கூறி வருகின்றனர்.