நடிகை காஞ்சனாவும்”சென்னை பத்மாவதி தாயாரும்,பல கோடி நிலத்தை தானம் அளித்தது இதற்குத்தான்,
ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற காஞ்சனா திருப்பதி ஏழுமலையான் பக்தையாக மாறி தனது பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை தானமாக அளித்துள்ளார். அவர் அளித்த நிலத்தில்தான் இன்று திருச்சானூரில் இருந்து பத்மாவதி தாயார் சென்னைக்கு எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பத்மாவதி தாயாருக்கும் நடிகை காஞ்சனாவிற்கும் என்ன தொடர்பு..அவர் தனது நிலத்தை தானமாக அளிக்க காரணம் என்ன என்று பார்க்கலாம்.
விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார் இயக்குனர் ஸ்ரீதர்.
அவரது பெயர் மாற்றத்திற்குக் காரணம் நடிகை வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக்கொண்டு இருந்ததால் காஞ்சனா என்று இயக்குநர் ஸ்ரீதர் மாற்றினார். 1964ஆம் ஆண்டில் அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் படங்கள் குவிந்தன.
நடிகை காஞ்சனா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் 60-70 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை காஞ்சனா. 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தார். சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் பாட்டியாக நடித்திருந்தார் காஞ்சனா.
காஞ்சனாவின் சொத்துக்கள் :
அவர் சம்பாதித்த பணத்தில் சென்னை தியாகராயநகரில் சொத்துக்கள் வாங்கினார். அந்த சொத்துக்களை காஞ்சனாவின் உறவினர்கள் அபகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க நீதிமன்றம் வழக்கு என்று பெற்றோர்களுடன் அலைந்தேன். சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். ஆண்டவன் அருளால் வழக்கில் வென்று சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு கிடைக்கவே, ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏழுமலையானுக்கு எழுதி வைத்தார்.
திருமணமே செய்யவில்லை :
படத்தில் பிஸியாக நடித்து சம்பாதித்த காரணத்தால் எனக்கு திருமணம் செய்துவைப்பதைக்கூட பெற்றோர்கள் மறந்துவிட்டனர். நானும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்துவிட்டேன். இப்போது எனது தங்கை ஆதரவில் இருக்கிறேன். நான் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. எனது தங்கை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இப்போது ஆன்மிக ஈடுபாடுகளில் தீவிரமாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து ஏழுமலையானை தியானம் செய்வதும், யோகா பயிற்சிகளில் ஈடுபடுவதுமாக எனது பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பிறவி வேண்டாம் என்று கடவுளிடம் கேட்டு இருக்கிறேன் என்று சமீபத்தில் வெளியான பேட்டியில் கூறியிருந்தார் நடிகை காஞ்சனா.
தானமாக கொடுத்த நிலம் :
நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.
பத்மாவதி தாயார் கோவில்
கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்றது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.