தொழிலாளர் விரோத மசோதாவை நிறைவேற்றிய திமுக அரசு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக ஆபத்தான தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை சட்டசபையில் ஏப்ரல் 12 அன்று திமுக அரசு கமுக்கமாக நிறைவேற்றிவிட்டது!
சாதாரண பொது அறிவுள்ள எவராலும் உணரக் கூடிய ஆபத்தான ஷரத்துகள் இந்த 65ஏ சட்ட திருத்ததில் உள்ளன! அதில் முக்கியமான நான்கு பாயிண்டுகளை மற்றும் சொல்கிறேன்.
# வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது,
# வாழமுடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது,
# தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது,
# நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது..
இவ்வளவு ஆபத்தான சட்ட திருத்தம் என்பதால் சட்டசபையில் விவாதத்திற்கு வைத்தால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பாராவிதமாக சட்டென்று அமைச்சர் அறிவிக்க குரல் வாக்கெடுப்பு மூலம் 40 நொடிகளில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டது திமுக அரசு!
அதாவது, நூற்றாண்டாக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை வெறும் 40 நொடிகளில் தமிழக சட்டமன்றம் நிராகரித்துவிட்டது! இதை திமுக அரசு செய்திருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக உள்ளது!
வழக்கமாக இன்னின்ன விவகாரங்கள், மசோதக்கள் இன்று சட்ட சபையில் வைக்கப்பட உள்ளன என ஒரு லிஸ்டை முன்கூட்டியே அனைத்து உறுப்பினர்களுக்கும் தருவார்கள். அதிலும், இந்த நிகழ்ச்சி நிரல் இல்லை.
மோடி அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை விவாதமின்றி அராஜகமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது தான் நினைவுக்கு வருகிறது!
ஆனால், அதைவிட லாவகமாக இதை அமல்படுத்திவிட்டது திமுக! இந்த செய்தியைக் கூட பல முக்கிய வெகுஜன ஊடகங்கள் கவனப்படுத்தவில்லை. நியாயமாக முதல் பக்கத்தில் எட்டுகால தலைப்பு செய்தியாக வந்திருக்க வேண்டிய செய்தி இது! தலையங்கத்தில் கண்டித்து எழுதப்பட வேண்டிய செயல்பாடு இது! இன்றைய ஊடகங்களின் லட்சணம் இது தான்.
இது நாள் வரை நான் ஒருவன் மட்டுமே ஒற்றையாளாய் பாஜக பாதையில் திமுக பயணிக்கிறது என விடாது சொல்லிக் கொண்டிருந்தேன். இன்றைக்கு இடதுசாரி இயக்கங்களும், அதன் தொழிற்சங்கங்களான ஏஐடியுசி, சிஐடியு ஆகியவையும் பகிரங்கமாக சொல்கின்றன. ‘’இந்த சட்ட திருத்த அமலாக்கத்தின் மூலம் மோடியின் வழியில் அவரையும் முந்தி செல்கிறார் ஸ்டாலின்’’ என!
இந்தியாவில் பாஜக அல்லாத வேறெந்த மாநிலமும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தம் 65ஏ –வை திமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளதை அறிந்து திமுகவின் தொழிற்சங்க அமைப்பான எல்.பி.எப்பும் விக்கித்து நிற்கிறது – என்ன சொல்வதென்று தெரியாமல்!
பெரியார், அண்ணா, கலைஞர் வழி வந்த திமுக இயக்க தொண்டர்கள் தான்? இன்றைய தலைமையை இடித்துரைத்து நல்வழிப்படுத்த வேண்டும்.
நன்றி=சாவித்திரி கண்ணன்