அமரன் திரைப்படம் அரசின் ஊது குழலா? அமரன் திரைப்படம் அரசின் ஊதுபொருளா
‘அமரன்’ பெண் வழி கதைகூரல் கொண்ட படம். அதுவும் தொலைதூரத்தில் கணவன், மரணத்தறுவாயில் கணவன், அறுதியில் மரணமுறும் கணவன் என ஒரு பெண்ணின் நெஞ்சை உருக்கும் துயரைச் சொல்லும் படம். மகனது இறப்பினால் துயருரும் தாயினதும், சகோதரனின் பிரவினால் துயருரும் சகோதரியரதும் படம். தகப்பனை போரில் பறிகொடுக்கும் ஒரு பிஞ்சுப் பெண் குழந்தை குறித்த படம்.
அரசு அமைப்பின் பகுதியான அமரன் குறித்த இத்தகைய கதை கூரலில் பார்வையாளர் கண்ணீர் உகுக்கத்தக்க பலதருணங்கள் இயல்பாகவே இருக்கும். அப்படிப் பல காட்சிகள் அமரனில் இருக்கின்றன. அடிப்படை மனிதாபிமானம், நெஞ்சில் ஈரம் உள்ள எவரும் இதற்காக நெகிழவே செய்வர்.
காஷ்மீரில் நடப்பது இருதரப்பாளருக்குமான ஒரு போர். இதில் அவரவருக்கான நியாயங்கள் உண்டு. ஒரு படைப்பாளி என்பவன் அவரவருக்கான நியாயங்களை உரையாடலாக முன்வைக்கும் கடமை கொண்டவன். பார்வையாளனுக்கு போதனை செய்வது அவனது பணி அல்ல.
காஷ்மீரில் காணாமல் போனவர்கள் 8,000 பேர்கள் முதல் 10,000 வரையிலானவர்கள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவர்களில் மணமாணவர்கள் 2,000 முதல் 2,500 வரையிலானவர்கள். ஆண்டுக்கணக்கில் தமது கணவர்கள் திரும்பி வராததால் மறுமணமும் செய்துகொள்ள முடியாமல் மணவாழ்விலும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிற இப்பெண்களே காஷ்மீரின் ‘பாதி விதவைகள்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குக் குழந்தைகளும் உண்டு.
இவர்தம் கணவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள்? இந்திய ராணுவத்தினருடனான நேரடிப் போரில் மரணமுற்றிருக்கலாம். இந்திய ராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு அவர்கள் கொல்லபட்டிருக்கலாம். துரோகிகள் என தமது சொந்த இயக்கத்தவர்களால் கொல்லப்பட்டிருக்கலாம். காஷ்மீர் இந்திய ராணுவ முகாம்களின் முன்பு தமது கணவனது படங்களைப் பிடித்தபடி நிற்கும் பாதி விதவைகள் இந்திய ராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள். இதுபற்றிப் பல சர்வதேச மனித உரிமை அறிக்கைகள் இருக்கின்றன. இவர்களை எல்லைதாண்டி பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் என்று போகிற போக்கில் ஒரு செய்தியை வீசிவிட்டுச் செல்கிறது அமரன் திரைப்படம்.
கொஞ்சமும் மனிதாபிமானமற்ற, அரசின் ஊதுகுழலாக இயக்குனர் வெளிப்பட்ட தருணம் அது. பாதி விதவைகளான அந்தப் பெண்களும் பார்வையாளரது இரக்கத்திற்கு உரியவர்கள்தான். அவர்களும் பாசமும் நேசமும் எதிர்பார்ப்புகளும் கொண்ட அபலைப் பெண்கள்தான். ஒரு ஆயுதமோதலில் பெண்களின் பாலான இந்தச் சமநிலையிலான மனிதநேயத்தை இழந்துவிட்டால் எப்படி ஒரு படைப்பாளி தன்னை நேர்மையாளன் எனக் கோரிக்கொள்ள முடியும்?
யமுனா ராஜேந்திரன்