“தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை”
சென்னை, சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, ‘அட்சய’ திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். அனைத்து நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் இல்லங்களில் அளவில்லாமல் சேரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அந்த வகையில், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைகிறது. அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளும் அறிவித்தன. பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி,கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. கூட்டம் அதிகம் குவியும் என்பதால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான நகைகடைகள் நேற்று அதிகாலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில், நகைகடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நகைகடைகளில் குறிப்பிட்ட நேரத்தில், நகைகளை வாங்குவதற்கு, ஒரு வாரத்துக்கு முன்பே, 75 சதவீத தொகை செலுத்தி பலர் முன்பதிவு செய்து, நகைகளை நல்ல நேரத்தில் வாங்கினர். விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் அட்சய திருதியை நாளில் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர். இதனால் தங்க நகைக்கடைகளில் மிக அதிக அளவு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,000 கோடி கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் 2.50 மணி வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் பல கோடிக்கு தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.