திவ்யதேசம்:”திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் – செங்கமலவல்லி”
திவ்யதேசம்:”திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் – செங்கமலவல்லி”
திருத்தேற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. இக்கோயில் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது. மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்,
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்தென் செங்கண் மாலை
கூறணிந்த வேல்வலவன் ஆலிநாடன்
கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி
பாரணிந்த தொல்புகழோன் கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்
சீரணிந்த வுலகத்து மன்னராகிச்
சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே.-(1287)
பெரிய திருமொழி 4-4-10
என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே
உள்ளது. திருத்தெற்றியம்பலம் என பெயர் வரக் காரணம் யாதென
அறியுமாறில்லை. மலையாளத்தில் தான் கோவிலை அம்பலம் என்னும்
சொல்லால் குறிப்பர். தமிழ்நாட்டிலும் சில கோவில்களுக்கு அம்பலம் என்னும்
சொல் பயின்று வரினும் 108 வைணவ திவ்ய தேசங்களில் இத்தலம் ஒன்றிற்கு
மட்டுமே அம்பலம் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது.
பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் திருநாங்கூருக்கு உள்ளேயே இருப்பதால் இத்தலத்தை
அடைவதில் சிரமம் ஒன்றுமில்லை.
மூலவர்:
செங்கண்மால் ரங்கநாதர். லட்சுமிரங்கர் நான்கு புஜங்களுடன் சயன
திருக்கோலம். கிழக்கு நோக்கிய சயனம்.
தாயார் :
செங்கமலவல்லி
தீர்த்தம் :
சூர்ய புஷ்கரணி
விமானம் :
வேதவிமானம்
சிறப்புக்கள்
1) நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயன திருக்கோலத்தில்
இருக்கும் இப்பெருமான் பார்ப்பதற்கு மிகவும் பேரழகு வாய்ந்தவர்.
செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர் இந்தப் பெருமாள்.
2) இப்பெருமானைச் சேவிப்பவர்கள் அரசாளும் வல்லமை பெறுவர்.
ராஜ்யாதிபத்தியத்திற்கான (அரசு பதவி சம்பந்தமான) வேண்டுதல்கள்
இப்பெருமானை வேண்டியவர்கட்கு சித்திக்கிறதென்பது ஐதீஹம். தலைப்பில்
கொடுத்துள்ள பாவினில் திருமங்கையையும் இதைக்கொடிட்டு காட்டுகிறார்.
3) திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீரங்கத்து
ரெங்கநாதனாவார்.அதனாற்றான் அரங்கனைப்போல (ஆதிசேடன் மேல்
சயனித்து) பேரழகு வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.“திருத்தெற்றியம்பலத்தேன் செங்கண்மாலை” என்று மங்களாசாசனம்,இருப்பினும் பள்ளிகொண்ட பெருமாள் என்பதே இங்கு பிரபலம். 4) திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம். 5) இவரும் கருடசேவைக்கு திருநாங்கூர் வருவார்