ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்றம் ஆணை
ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழு வின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ராஜமூர்த்தி ( நி. எ) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம்எடுப்பு) ராஜமூர்த்தி , அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.