சபரிமலைக்கு 50,06,412 பக்தர்கள் வருகை; கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி கூடுதல் வசூல்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடைதிறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதி தரிசனம் செய்தனர். இந்த சமயத்தில் வேறுயாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதன்பின் கோயில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13ம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடமண்டல, மகரவிளக்கு காலத்தில் 19ம் தேதி வரை கோயில் மொத்த வருமானம் ரூ.357.47 கோடியாகும். கடந்த வருடத்தை விட இந்த வருடம் ரூ.10 கோடிக்கு மேல் அதிக வருமானம் கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் கிடைத்த நாணயங்களை எண்ணினால் வருமானம் ரூ.10 கோடிக்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வருடத்தை விட 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இம்முறை சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்த வருடம் 44,16,219 பக்தர்கள் வந்தனர். இந்த வருடம் 50,06,412 பக்தர்கள் வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.