ஒரு மாதத்தில் 2,240 கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வால் ஒட்டுமொத்த தொழிற்சாலைகளையும் மூட முடியாது. விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கலாம். திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்தில் குமரி மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்கு செல்பவர்களிடம் காப்பீடு திட்ட அட்டை இருந்தாலும் பணம் வசூலிப்பதாக கூறுகிறீர்கள். ஆனால் கேரளாவில் இருந்து பல நோயாளிகள் தமிழகத்துக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். இதுவரை 1.44 கோடி பேருக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக பயிற்சி முடித்த 1,021 டாக்டர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதேபோல 983 மருந்தாளுனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். கோர்ட்டு வழக்குகள் முடிந்த பிறகு 1,266 சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் 2,240 கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, ராணிபேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிடம் அறிவுறுத்தி உள்ளார் என நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.